Tuesday, July 5, 2011

வெண்மேகம் பெண்ணாக - யாரடி நீ மோகினி


எனக்குப் பிடித்த பாடல்களில் இதுவும் ஒன்று. தெலுங்கில் செல்வராகவன் இயக்கி, யுவன் இசையமைத்து ஹிட்டடித்த படம். தமிழில் செல்வாவின் உதவி இயக்குநர் ஜவகர் இயக்கிய படம். படத்தை இன்னும் முழுசாக பார்க்கவில்லை. ஆனாலும், இந்த பாடல் பார்த்ததும் மிகவும் பிடித்துவிட்டது.

முக்கிய காரணம் இருவர். ஹரிகரன் மற்றும் நா.முத்துக்குமார்.

பாடலின் வரிகள் அற்புதமாக இல்லை. அதாவது நா.முத்துக்குமாரின் மற்ற அற்புதமான பாடல் வரிகளைப்போல இல்லை. ஆனால், தாளம் இனிமையாக மெதுவாக செல்கிறது. மெதுவாக செல்லும் இந்த தாளம் தான் இந்த பாடலில் மிகப்பெரிய ப்ளஸ். மற்றும் ஹரிகரனின் குரல், இந்த பாடலுக்கு நச்சென பொருந்தி போகிறது. 'உயிரே உயிரே' பாடலில் கூட எனக்கு அவ்வளவாக அவர் குரல் பிடித்ததில்லை.

ஒரு முறை சென்னை மின்சார இரயிலில் சென்றுகொண்டிருந்த பொழுது நடந்தது. என் அருகில் சில கல்லூரி மாணவர்கள் அமர்ந்து சென்னை பாஷையில் சத்தம் போட்டு பேசிக்கொண்டிருந்தனர். எங்கள் இருக்கையில் எதிர்ப்பக்க மூலையில் இருவர் இந்த பாடலை தங்கள் கைப்பேசியில் ஏதோ ஒரு எஃப்.எம்.மில் இருந்து கசிந்து விட்டபடி எங்கள் பயணம் தொடர்ந்தது. என் அருகில் இருந்தவர்கள் பேசியபேச்சில் என்னால பாட்டையும் முழுசாக கேட்கவில்லை. ஆனால், ஒரு கட்டத்தில் என் அருகில் இருந்தவர்கள் தாங்கள் பேசுவதை குறைத்துக்கொண்டனர். பின் அப்படியே நிறுத்தியும் விட்டனர். எனக்கோ ஆச்சரியம். அந்த பாடலில் இருந்து "என் காதலும் என்னாகுமோ. உன் பாதத்தில் மண்ணாகுமோ" என்ற வரிகள் வரும் போது அவர்களும் தங்களை மறந்து கூடவே பாட ஆரம்பித்துவிட்டனர். எல்லோரையும் கரைத்துவிட்ட பாடலிது.

அப்புறம் சிற்சில விஷயங்கள் இந்த பாடலின் விஷுவலில் இருக்கும். உதா, நாயகி பால் குடித்துவிட்டு வந்த மீசையை பற்றி இருவரும் கண்களாலேயே பேசிக்கொள்வது, 'ஒன்றா, இரண்டா உன்னழகை பாட' என்ற இடத்தில் எடிட்டிங்.

'பெண்ணே என்னடி, உண்மை சொல்லடி' - சொல்லடி என்று இடத்தில் 'சொ' என்ற வார்த்தைக்கு முன் ஒரு 'ஸ்' வரும். 'உண்மை ஸ்சொல்லடி' என்று. இந்த இடம் எனக்கு மிகவும் பிடித்தமானது.

முக்கியமாக கவனித்து பாருங்கள். இந்த பாடல் தாளத்துடன் ஒட்டாது. சில மைக்ரோ செகண்டுகள் வித்தியாசம் இருக்கும். பாடுபவரின் குரல் சில மைக்ரோ செகண்டுகள் delay ஆகும்.

இந்த பாடலின் interlude-ல் வரும் இசை பிரமாதம்.

கேட்டிராதவர்கள் கேட்டு பின் பாருங்கள், பார்த்தவர்கள் மீண்டும் பாருங்கள்.

பாடல்வரிகள்

வெண்மேகம் பெண்ணாக உருவானதோ
இந்நேரம் எனை பார்த்து விளையாடுதோ (வெண்மேகம்)

உன்னாலே பல ஞாபகம்
என் முன்னே வந்தாடுதே
ஒரு நெஞ்சம் திண்டாடுதே... (உன்னாலே)

வார்த்தை ஒரு வார்த்தை
சொன்னால் என்ன?
பார்வை ஒரு பார்வை
பார்த்தால் என்ன?

(உன்னாலே)
(வெண்மேகம்)

மஞ்சள் வெயில் நீ மின்னல் ஒளி நீ
உன்னை கண்டவரை கண் கலங்க நிற்கவைக்கும் தீ
பெண்ணே என்னடி உண்மை சொல்லடி
ஒரு புன்னகையில் பெண் இனமே கோவப்பட்டதென்னடி?

தேவதை வாழ்வது வீடில்லை கோவில்
கடவுளின் கால் தடம் பார்க்கிறேன்
ஒன்றா இரண்டா
உன் அழகை பாட

கண்மூடி ஓரு ஓரம் நான் சாய்கிறேன்
கண்ணீரில் ஆனந்தம் நான் காண்கிறேன்

(உன்னாலே)

எந்தன் மனதை கொள்ளையடித்தாய்
இந்த தந்திரமும் மந்திரமும் எங்கு சென்று படித்தாய்
விழி அசைவில் வலை விரித்தாய்
உன்னை பல்லக்கினில் தூக்கி செல்ல கட்டளைகள் விதித்தாய்

உன் விரல் பிடித்திடும் வரம் ஒன்று கிடைக்க
உயிருடன் வாழ்கிறேன் நானடி
என் காதலும் என்னாகுமோ
உன் பாதத்தில் மண்ணாகுமோ

(வெண்மேகம்)

படம்: யாரடி நீ மோகினி
பாடலாசிரியர்: நா.முத்துக்குமார்
இசை: யுவன் சங்கர் ராஜா
பாடியவர்: ஹரிகரன்

கானொளி